பக்கங்கள்

بسم الله الرحمن الرحيم الحمدلله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته بارك الله بكم و سدد خطاكم

அன்பு நண்பர்களுக்கு.... அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு. எனக்கு மிக்க மகிழ்ட்சி நீங்கள் என் இணையதளத்திர்க்கு வந்ததற்கு - அல்ஹம்துலில்லாஹ்

மஸ்ஜித்-இ- ஹரம் வாசுதேவநல்லூர்

மஸ்ஜித்-இ- ஹரம் வாசுதேவநல்லூர்
மஸ்ஜித்-இ- ஹரம் வாசுதேவநல்லூர்

செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

புறம் பேசுதல்

முஸ்லிம்கள் ஒன்றுகூடும் சபையில் புறம் பேசுவது, பிறரை இழிந்துரைப்பது போன்ற செயல்கள் பிரிக்கமுடியாத ஒன்றாகிவிட்டது. ஆனால் உள்ளங்கள் வெறுக்கும் அறுவருப்பான உவமையைக் கூறி இதனை விட்டும் தவிர்ந்து கொள்ள அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

அல்லாஹ் கூறுகிறான்:
உங்களில் சிலர் சிலரைப்பற்றிப் புறம் பேசவேண்டாம். உங்களில் ஒருவர் தன்னுடைய சகோரசரின் மாமிசத்தை அவர் இறந்து பிணமாக இருக்கும் நிலையில் புசிக்க விரும்புவாரா? அப்போது அதனை நீங்கள் வெறுத்து விடுவீர்கள். (அல்குர்ஆன் 49:12)

புறம் என்றால் என்னவென நபி(ஸல்)அவர்கள் விவரிக்கின்றார்கள்:
புறம் என்றால் என்னவென நீங்கள் அறிவீர்களா? என நபி(ஸல்)அவர்கள் கேட்டபோது, அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிவர் என நபித்தோழர்கள் கூறினர். அப்போது நபி(ஸல்)அவர்கள், உன்னுடைய சகோதரன் வெறுப்பதை நீ கூறுவது தான் -புறம்- என்றார்கள். நான் கூறுவது என்னுடைய சகோதரனிடம் இருந்தால் அதுவும் புறமாகுமா? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்)அவர்கள், நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இருந்தால் நீ அவனைப் பற்றி புறம் பேசுகிறாய். நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இல்லையெனில் நீ அவனைப் பற்றி இட்டுக்கட்டுகிறாய் என்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: முஸ்லிம்)

நம்முடைய முஸ்லிம் சகோதரர் வெறுப்பதை நாம் கூறுவதே புறம் ஆகும். அது அவருடைய உடல், மார்க்கம் மற்றும் உலக விஷயம், மனோநிலை, நடைமுறை, குணம்.. ஆகிய எதனோடு தொடர்புடையதாக இருந்தாலும் சரியே! புறம் பேசுவதில் பல வகைகள் உள்ளன. ஒரு முஸ்லிமின் குறையைக் கூறுவதும் பிறரை இழிந்துரைப்பதும் புறம் பேசுவதில் ஒருவகையே!

அல்லாஹ்விடத்தில் மிகக்கேவலமான, இழிவாகக் கருத்தப்படும் புறம் பேசுதல் விஷயத்தில் மக்கள் மிகப் பொடுபோக்காக உள்ளனர்.

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: வட்டியிலேயே மிகக் கொடிய வட்டி ஒருவன் தனது சகோதரனின் கண்ணியத்திற்கு இழுக்கு விளைவிப்பதாகும். (அறிவிப்பவர்: ஸயீத் பின் ஜைத்(ரலி) நூல்: அபூதாவூத்)

சபையில் இருப்பவர் இத்தீமையிலிருந்து பிறரைத் தடுப்பது கடமையாகும். மேலும் புறம் பேசப்படும் சகோதரருக்கு சார்பாக நாம் பேசவேண்டும். இவ்வாறு பேசுவதை நபி(ஸல்)அவர்கள் வரவேற்றுள்ளார்கள்.

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: தனது சகோதரனுடைய கண்ணியத்திற்கு இழுக்கு விளைவிப்பதை தடுப்பவரின் முகத்தை மறுமை நாளில் நரக நெருப்பை விட்டும் அல்லாஹ் தடுத்துவிடுவான். (அறிவிப்பவர்: அபூதர்தா(ரலி) நூல்: அஹமத்)

யா அல்லாஹ்! எங்களுடைய பாவங்களையும் எங்களுடைய செயல்களில் நாங்கள் வரம்புமீறியதையும் மன்னித்தருள்வாயாக! எங்களுடைய தவ்பாவை ஏற்றுக் கொள்வாயாக!

நபி(ஸல்)அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் அனைத்து தோழர்களின் மீதும் அருள்புரிவாயாக!

-அகிலத்தோரின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்-

வட்டி உண்ணுதல்

அல்லாஹ் தன்னுடைய வேதத்தில் வட்டி வாங்குபவர்களைத் தவிர வேறு யாருடனும் நேரடியாகப் போர்ப் பிரகடனம் செய்யவில்லை. இது எவ்வளவு பெரிய கொடிய குற்றம் என்பதற்கு இதுவே போதுமான சான்றாகும்.

அல்லாஹ் கூறுகிறான்:
விசுவாசம் கொண்டோரே! அல்லாஹ்வை நீங்கள் பயந்து கொள்ளுங்கள்! மேலும் நீங்கள் உண்மையாக விசுவாசம் கொண்டோராக இருப்பின் வட்டியில் (எடுத்தது போக) எஞ்சியிருப்பதை (எடுக்காமல்) விட்டுவிடுங்கள். ஆகவே (கட்டளையிடப்பட்டவாறு) நீங்கள் செய்யாவிடின் அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் போரிடுவதாகப் பிரகடனம் செய்துவிடுங்கள். (அல்குர்ஆன் 2:278-279)

தனிமனிதர்களும் பலநாடுகளும் இன்று பொருளாதாரப் பிரச்சனையில் சிக்கித் தவிக்கின்றனர் என்றால் நிச்சயமாக அது வட்டியின் அடிப்படையிலான பொருளாதாரத் திட்டங்களினால்தான். வட்டியை அடைக்க முடியாமல் திண்டாடுகின்றனர். பொருளாதாரத்தில் பின்தங்கி வளமிக்க நாடுகளில் இடம்பெற முடியாதநிலை. வட்டியின் காரணத்தால் எத்தனையோ பெரும் தொழிற்சாலைகளும் நிறுவனங்களும் இழுத்து மூடப்படுகின்றன. உழைப்பாளிகளின் வேர்வைகளால், முடிவடையாத வட்டியை நிறைக்கவே முடியாதநிலை. இதனால் பொருளாதாரம் குறிப்பிட்ட சிலரிடம் மட்டுமே சுற்றிக் கொண்டிருக்கின்றது. பலர் வறுமையில் சுழன்று கொண்டிருக்கிறனர். வட்டியில் ஈடுபடுபவர்களுடன் அல்லாஹ் போர்தொடுக்கின்றான் என்ற எச்சரிக்கை இவ்விளைவுகளாகக்கூட இருக்கலாம்.

வட்டித் தொழிலின் உரிமையாளர், அதன் பங்குதாரர், அதற்கு உதவுபவர், அதற்கு சாட்சி சொல்பவர் ஆகிய அனைவரும் நபி(ஸல்)அவர்களால் சபிக்கப்பட்டவர்களே!

வட்டி உண்பவன், அதனை உண்ணக் கொடுப்பவன், அதனை எழுதுபவன், அதன் இரு சாட்சியாளர்கள் ஆகிய அனைவரையும் நபி(ஸல்)அவர்கள் சபித்தார்கள். மேலும் இவர்கள் அவனைவரும் -தண்டனையால்- சமமானவர்களே! என்றும் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) நூல்: முஸ்லிம்)

இந்த ஹதீஸின் அடிப்படையில் வட்டி கணக்கு எழுதுவது, அதை சரிபார்ப்பது, வாங்கிக் கொடுப்பது, பெற்றுக் கொள்வது, அனுப்புவது, பாதுகாப்பது.. இது போன்ற வட்டியுடன் தொடர்புடைய அனைத்துச் செயல்களும் ஹராம் ஆகும்.

நபி(ஸல்)அவர்கள் இதன் இழிவான நிலையை இவ்வாறு கூறுகிறார்கள்:
வட்டிக்கு 73 வாயில்கள் உள்ளன. அதில் மிக எளிதானது ஒருவன்தனது தாயுடன் திருமணம் செய்து கொள்வதைப் போன்றதாகும். வட்டியிலேயே மிகக் கொடிய வட்டி முஸ்லிமின் உடமையைப் பறிப்பதாகும். (அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத், அபூஹுரைரா, ஸயீத்(ரலி) நூல்: இப்னுமாஜா, அபூதாவூத்)

வட்டியின் விபரீதங்களை அறிந்து கொண்டே அதன் ஒரு திர்ஹத்தை உண்பது 36 தடவை விபச்சாரம் செய்வதை விட மிகக் கடுமையான குற்றமாகும். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஹன்ழலா(ரலி) நூல்: அஹமத்)

வட்டி பணக்காரன், ஏழை என்ற வித்தியாசமின்றி அனைவருக்கும் அனைத்துச் சூழ்நிலையிலும் ஹராமாகும். எத்தனையோ பணக்காரர்கள் வட்டியின் காரணத்தினால் அனைத்தையும் இழந்து -ஓட்டாண்டி- பரதேசி- ஆயினர். நம் முன்னே நடைபெறும் எத்தனையோ நிகழ்ச்சிகள் இதற்கு சாட்சிகளாக உள்ளன. வட்டியின் குறைந்த பட்ச விபரீதம் யாதெனில் பொருளாதரத்தின் பரகத் -அபிவிருத்தி- அழிக்கப்பட்டுவிடும். அதிக பொருள் இருந்தாலும் சரியே!

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: வட்டியினால் ஈட்டப்பட்ட பொருளாதாரம் -அது அதிகமாக இருந்தாலும் சரியே- நிச்சயமாக அதன் முடிவு மிகவும் கஷ்டத்திலேயே முடியும். (அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத்(ரலி) நூல்: அஹமத்)

வட்டியில் குறைந்த தொகை அதிக என்றெல்லாம் வித்தியாசம் கிடையாது. அனைத்தும் ஹராமானவையே! வட்டியை உண்டு வாழ்ந்தவன் மறுமை நாளில் கப்ரிலிருந்து எழுப்பப்படும்போது ஷைத்தானால் தீண்டப்பட்டவன் எழுந்திருப்பதைப் போன்றே எழுந்திருப்பான்.
இது மிகப்பெருங்குற்றமாக இருந்தாலும் இதிலிருந்து விடுபட அதற்குரிய பாவமன்னிப்பு முறையை அல்லாஹ் விவரித்துக் கூறுகிறான்:

மேலும் நீங்கள் (தவ்பாச் செய்து) மீண்டுவிட்டால் உங்கள் செல்வங்களின் அசல் தொகை உங்களுக்கு உண்டு. நீங்கள் (அதிகமாக வாங்கி கடன் பட்டோருக்கு) அநீதி செய்யாதீர்கள். (அவ்வாரே) நீங்களும் (மூலத் தொகையைப் பெற்றுக் கொள்வதிலிருந்து) அநீதி செய்யப்பட மாட்டீர்கள். (அல்குர்ஆன் 2:279)

இதுவே நீதமான தீர்ப்பாகும். இப்பெரும்பாவத்திலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வதும், இதன் கோரநிலைகளை உணர்வதும் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கட்டாயக் கடமையாகும்.
நிர்ப்பந்தமாகவோ, பொருள் வீணாகிவிடும் அல்லது திருடப்பட்டுவிடும் என்ற பயத்திலோ வட்டியின் தொடர்பில் இயங்கும் பேங்கில் பணத்தை சேமிப்பவர்கள் உண்மையிலேயே நிர்ப்பந்தத்தில்தான் உள்ளார்களா? என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இறந்தவற்றை சாப்பிடும் நிர்ப்பந்தத்தைவிட இது மிகவும் கடுமையான நிர்ப்பந்தமாக இருக்கின்றதா? என்று கவனிக்கவேண்டும். முடிந்தவரை மாற்று ஏற்பாட்டிற்கு முயற்சிக்க வேண்டும். அதுவரை தனது இச்செயலுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடிக் கொண்டிருக்க வேண்டும்.

மேலும் அவர் எந்தநிலையிலும் பேங்கிலிருந்து வட்டியை பெற்று பயன்படுத்தக் கூடாது. அவர்களுடைய கணக்கில் வட்டித் தொகை வருமானால் அதனை மார்க்கம் அனுமதிக்கும் ஏதேனும் செயலுக்காக கொடுத்துவிட வேண்டும். ஏனெனில் அந்தப் பொருளை அவர் அனுபவிப்பது ஹராமாகும். மேலும் பிறருக்கு கொடுப்பதினால் அது தர்மமாகவும் ஆகாது. தர்மத்தின் நன்மையும் கிடைக்காது. ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் தூய்மையானவன். தூய்மையானதை மட்டுமே அவன் ஏற்றுக் கொள்வான். மேலும் எந்தவிதத்திலும் அந்தப் பொருளை தனக்காகப் பயன்படுத்தக் கூடாது. அந்தப் பணத்தில் உண்பது, பருகுவது, அணிவது, வாகனிப்பது, வசிப்பது, தாய், தந்தை, மனைவி, பிள்ளைகளுக்காக செலவு செய்வது, ஜகாத்தாகக் கொடுப்பது, தம்மீதுள்ள கடமையான வரிகளைச் செலுத்துவது, இவைபோன்ற எதற்கும் பயன்படுத்த அனுமதியில்லை. அல்லாஹ்வின் தண்டணைக்கு பயந்து வட்டியை விட்டு முற்றும் தவிர்ந்து வாழ முயற்சிக்க வேண்டும்.

 

மது அருந்துதல்

அல்லாஹ் கூறுகிறான்:
விசுவாசம் கொண்டோரே! நிச்சயமாக மதுவும் சூதாட்டமும் (வணக்கத்திற்காக) நாட்டப்பட்டுள்ளவை(களான சிலை)களும் குறிபார்க்கும்(சூதாட்ட) அம்புகளும் ஷைத்தானுடைய செயல்களிலுள்ள அருவருக்கத்தக்கவையாகும். ஆகவே இவைகளைத் தவிர்ந்து கொள்ளுங்கள். (அதனால்) நீங்கள் வெற்றிபெறுவீர்கள். (அல்குர்ஆன் 5:90)

தவிர்ந்து கொள்ள கட்டளையிடுவது அது ஹராம் என்பதற்கான தெளிவான ஆதாரமாகும். மதுவை கூறுவதுடன் இணைவைப்பாளர்களின் சிலை மற்றும் அவர்களின் சூதாட்ட அம்புகளையும் அல்லாஹ் இணைத்தே கூறுகிறான். எனவே திருமறையில் தவிர்ந்து கொள்ளுங்கள் என்றுதானே வந்துள்ளது. ஹராம் என்று கூறப்படவில்லையே! என்றெல்லாம் கூற எந்த ஆதாரமும் சாத்தியமும் கிடையாது. மது அருந்துவது பற்றி கடுமையாக எச்சரிக்கும் பலநபிமொழிகளும் உள்ளன.

ஜாபிர்(ரலி)அவர்கள் கூறுகிறார்கள்:
போதைப் பொருளை அருந்துபவர்களுக்கு "தீனத்துல் கப்பால்" எனும் பானத்தை புகட்டுவதாக அல்லாஹ் முடிவு செய்துள்ளான் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், தீனத்துல் கப்பால் என்றால் என்னவென்று கேட்டனர். அது நரகவாசிகளின் வேர்வை அல்லது நரகவாதிகளிடம் பிழிந்தெடுக்கப்பட்ட பானம் என பதிலளித்தார்கள். (நூல்: முஸ்லிம்)

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: மதுபோதையில் மூழ்கியவன் இறந்துவிட்டால் சிலைவணங்கியைப் போன்று -மறுமையில்- அல்லாஹ்வை சந்திப்பான். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: அஹமத்)

நாம் வாழும் இக்காலகட்டத்தில் மது வகைகளும், போதைப்பொருட்களும் பல்கிப் பெருகிவிட்டன. பீர், ஆல்கஹால் போன்ற எத்தனை எத்தனையோ போதைப் பொருட்கள் அரபியிலும், அந்நிய மொழிகளிலும் பல பெயர்களில் அறிமுகமாகியுள்ளன. நபி(ஸல்)அவர்கள் அன்று வர்ணித்த சமுதாயத்தினர் இன்று தோன்றிவிட்டனர்.

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்: என்னுடைய சமுதாயத்தில் சிலர் மதுவுக்கு மாற்றுப் பெயர் சூட்டி நிச்சயமாக அதனை அருந்துவர். (அறிவிப்பவர்: அபூமூஸா(ரலி) நூல்: அபூதாவூத்)

ஏமாற்றும் விதமாக மதுவுக்கு இன்றியமையாப் பொருள் போல பெயர் சூட்டி அதனை அருந்திக் கொண்டிருக்கின்றனர்.

அல்லாஹ் கூறுகிறான்:
அல்லாஹ்வையும் ஈமான் கொண்டவர்களையும் அவர்கள் -நயவஞ்சகர்கள்- ஏமாற்றுகின்றனர். (இதனால்) அவர்கள் தங்களைத் தாமே தவிர (வேறெவரையும்) ஏமாற்றவில்லை. (இறை) அவர்கள் உணர்ந்து கொள்ளவும் மாட்டார்கள். (அல்குர்ஆன் 2:9)

மார்க்கம் மதுவிற்கு கடும் கட்டுப்பாட்டை விதிக்கிறது. போதை பொருட்களின் ஆணி வேரையே கிள்ளி எறிகிறது.

நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: போதை தரும் அனைத்தும் மதுவாகும். போதை தரும் அனைத்தும் ஹராமாகும்.(அறிவிப்பவர்: இப்னுஉமர்(ரலி) நூல்: முஸ்லிம்)

மதிமயங்கச் செய்யும், போதையூட்டும் அனைத்தும் -அது குறைவாக இருந்தாலும் சரியே!- ஹராம் ஆகும். அதற்கு எத்தனை மாற்றுப் பெயர்கள் சூட்டப்பட்டிருந்தாலும் போதை என்பதில் அவையனைத்தும் ஒன்றுதான். அவையனைத்தின் சட்டமும் ஒன்றுதான்.

இறுதியாக, மது அடிமைகளுக்கு நபி(ஸல்)அவர்கள் செய்த உபதேசம் இதோ!
மது அருந்தி போதையடைந்தவனின் நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அவன் அவ்வாறே இறந்துவிட்டால் நரகில் நுழைவான். தவ்பாச் செய்தால் அல்லாஹ் அவனை மன்னிப்பான். மீண்டும் மது அருந்தினால் அவனுடைய நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. அவன் அவ்வாறே இறந்துவிட்டால் நரகில் நுழைவான். தவ்பாச் செய்தால் அல்லாஹ் அவனை மன்னிப்பான். மீண்டும் மது அருந்தினால் அவனுடைய நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அவன் அவ்வாறே இறந்துவிட்டால் நரகில் நுழைவான். தவ்பாச் செய்தால் அல்லாஹ் அவனை மன்னிப்பான். மீண்டும் அருந்தினால் மறுமை நாளில் ரத்கத்துல் கப்பால் எனும் பானத்தை அல்லாஹ் அவனுக்கு புகட்டுவது கடமையாகிவிட்டது என்று நபி(ஸல்)அவர்கள் கூறியபோது, நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்களே! ரத்கத்துல் கப்பால் என்றால் என்ன? என்று கேட்டனர். அதற்கவர்கள், நரகவாசிகளிடம் பிழிந்தெடுக்கப்பட்ட பானம் என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி) நூல்: இப்னுமாஜா)

 

http://www.smhowsee.blogspot.in/

ஜஜாக்கல்லஹு கைரா. - அல்ஹம்துலில்லாஹ்

நன்றி மீண்டும் வருக எனக்கு துஆ செயுங்கள்

அஸ்ஸலாமுஅலைக்கும்வரஹ்மதுல்லாஹிவபரகாதுஹு.